ரோஜர் டீக்கின்ஸ்: விருதுகளுக்கு அப்பால்…

Aug 10 2016

Views: 2949

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒளிப்பதிவு இயக்குநரான ரோஜர் டீக்கின்ஸ் பதிமூன்று முறை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஆனால் 2016ம் ஆண்டு வரை ஒரு முறைகூட இவருக்கு விருது கிடைக்காதது ஆச்சரியமான மற்றும் வருத்தத்திற்கு உரிய விஷயம்.

மிகச்சிறந்த ஒளிப்பதிவுக்கலைஞராக கடந்த இருபத்தைந்து வருடங்களாக பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றி ஒவ்வொரு படைப்பிற்கும் ஏற்ப அவற்றை தன் கலைத்திறனால் மேம்படுத்தியுள்ளார்.

1949 ம் ஆண்டில் பிறந்த இவர் தன் இளமைக்காலங்களில் ஓவியம் வரைதல் மற்றும் சுய ஆர்வ புகைப்படக்கலைஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.

திரைப்பள்ளியில் தன் படிப்பை முடித்துவிட்டு ஆவணப்படங்களில் சுமார் ஏழு வருடங்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதில் குறிப்பாக ‘அரவுண்ட் தி வோர்ல்ட் வித் ரிட்ஜ்வே’ (Around the world with Ridgeway) அவருக்கு கணிசமான கவனத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து இசை வீடியோக்கள், தொகுப்புகள் செய்து வந்த டீக்கின்ஸ் 1990ம் ஆண்டு அமெரிக்காவில் ‘மவுன்டென்ஸ் ஆஃப் தி மூன்’ (Mountains of the Moon) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

1991ம் ஆண்டில் இன்றும் உலகின் தலைசிறந்த இயக்குநர்களாகக் கருதப்படும் கோயன் பிரதர்ஸ் (Coen Brothers) உடன் இணைந்து ‘தி பார்டன் ஃபிங்க்’ (The Barton Fink) திரைப்படத்தில் பணியாற்றியது அவரது திரைவாழ்வின் திருப்பமாகும்.

ஃப்ராங்க் டாராபாண்ட் (Frank Darabont) இயக்கிய ‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ (The Shawshank Redemption) திரைப்படத்தில் ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவு அவரது ரசனையின் உச்சம் எனலாம். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலையில் இடம்பெறுவதால் சிறைச்சாலையின் உட்புறம் இருள் நிரம்பிய ஒளியமைப்பையும், வெளிப்புறத்தில் படரும் ஒளித்தன்மையுடனும் அமைத்திருந்தார். நீண்ட காலம் ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தியே திரைக்கதை பயணிப்பதால் டீக்கின்ஸ் தன் மேதைமையாலும் ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தாலும் ஒளியின் அளவை வேறுபடுத்தியும் நிறத்தன்மையின் பண்புகளை அதற்கு ஏற்றவாறு அமைத்தும் பல்வேறு காலநிலைகளை உணர்த்தி தத்ரூபமான திரைக்காவியம் படைத்தார்.

‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ திரைப்படம் 1994ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவு உட்பட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு எந்த விருதும் தரப்படவில்லை. ஆனால் அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் சினிமெடோகிராஃபர்ஸ் (American Society of Cinematographers) அமைப்பு அவரை சிறந்த ஒளிப்பதிவிற்காக கெளரவித்தது. பின்னர் மீண்டும் 2011ம் ஆண்டில் அதே அமைப்பு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அளித்தது.

ஒரே வருடத்தில் (2008 ம் ஆண்டு) தி அஸாஸினேஷன் ஆஃப் ஜெசி ஜேம்ஸ் பை தி கெளவர்ட் ராபர்ட் ஃபோர்ட் (The Assassination of Jesse James by the coward Robert Ford), நோ கன்ட்ரி ஃபார் தி ஓல்ட் மேன் (No country for the old man) ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் ரோஜர் டீக்கின்ஸ்.

கோயன் பிரதர்ஸ் இயக்கிய 12 திரைப்படங்களில் ரோஜர் டீக்கின்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநர்களான எட்வர்ட் சிவிக் (Edward Zwick), நார்மன் ஜூவிசன் (Norman jewison), சாம் மென்டீஸ் (Sam Mendis), மனோஜ் நைட் சியாமளன் (Manoj Night Shyamalan), டென்னிஸ் வில்லெவிவே (Denis Villeneuve) ஆகியோருடன் மிகச்சிறந்த படைப்புகளில் பணியாற்றி தனி முத்திரை பதித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அதன் மாறுதல்களுக்கேற்ப ரோஜர் டீக்கின்ஸ் தன்னை புதுப்பித்துக்கொண்டே வருகிறார். குறிப்பாக டிஜிட்டல் ஒளிப்பதிவின் வரவை பல்வேறு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்துவந்த வேலையில் ஃபிலிம் மீடியத்திலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு ‘ஸ்கை ஃபால்’ (Sky Fall) ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் ஒவ்வொரு ஃபிரேமையும் ஒரு நவீன ஓவியமாகவே தன் ஒளிப்பதிவில் உருவாக்கினார். இந்தத் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அதிகமான ஒளிக்கருவிகளை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை என்பது ரோஜர் டீக்கின்ஸ்ஸின் தனிச்சிறப்பு. பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று லைட்டுகளைக் கொண்டுதான் அவர் ஒளியமைக்க விரும்புகிறார்.

லென்ஸுகளின் தன்மையை முக்கியமானதாகக் கருதும் இவர் ‘அனமார்ஃபிக் சினிமாஸ்கோப் லென்ஸ்களை’ பயன்படுத்துவதில்லை.

பல்வேறு அமைப்புகள் மூலம் ஒளிப்பதிவுக் கலையை இளைஞர்களுக்கு வழங்குவதோடு அவரது இணையதளத்தின் மூலமும் ஒளிப்பதிவு குறித்த கேள்விகளுக்கு விளக்கங்களையும் அளித்து வருகிறார்.

2015 ம் ஆண்டு சிகாரியோ (Sicorio) திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் நைட் விஷன் தன்மையை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து பெரும் பாராட்டைப் பெற்றார்.
இவரது அடுத்த படைப்பு 2017 ம் ஆண்டு வெளியாக உள்ள பிளேட் ரன்னர் 2 (Blade runner 2) ஆகும்.

ரோஜர் டீக்கின்ஸின் அமைப்பு (Forum) இணைப்பில் சென்று லாக் இன் செய்து பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களை அறியலாம். http://rogerdeakins.com/

டீக்கின்ஸ் ஒளிப்பதிவு செய்த பல்வேறு திரைப்படங்களிலிருந்து காட்சிகளின் தொகுப்பை ‘ஷாடோஸ் இன் தி வேலி’ (Shadows in the valley) என்ற தலைப்பில் பார்க்கலாம்.

Author:
சி.ஜெ.ராஜ்குமார்,
ஒளிப்பதிவு இயக்குநர்.
(shadows in the valley)

x
^