தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் thesica.in இணையதளம் தொடக்க விழா

Jun 25 2016

Views: 2972

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் thesica.in இணையதளம் தொடக்க விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில்  நடந்தது. இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முதல் உறுப்பினர்  எம்.ஏ.இரானி,தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன்,நடிகர் சங்கத் தலைவர் நாசர்  ஆகியோர் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும் போது ” எனக்கு “சிகா”வின் வெற்றி மகிழ்ச்சி தந்தது. நாங்கள் நடிகர் சங்க வெற்றியை விட ‘சிகா’வின் வெற்றியை கொண்டாடினோம். அந்த அளவுக்கு எங்களுடன் பந்தம் உள்ளவர்கள் நீங்கள். நாங்கள்  ;நடிக்க அனுபவம் ,அறிவு இல்லாமல் கூட வருவோம். ஆனால் நீங்கள் அறிவுடன்தான் வரவேண்டும். கற்றுக் கொண்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு இருக்கிறது .அந்த வகையில் எங்களை விட ஞானம் உள்ளவர்கள் நீங்கள்தான்.எங்களைவிட ஞானத்தில் சிறந்தவர்கள் நீங்கள் என நான் நம்புகிறேன். இன்று எவ்வளவோ மாற்றங்கள் வந்து உள்ளன .

ஆனாலும் என்ன? சினிமா பற்றி  மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.சினிமா பற்றிய மூடநம்பிக்கைகளை குழி தோண்டிப் புதைக்க வேண்டும். மூடநம்பிக்கைகளைப் புதைத்து அறிவு என்கிற புதிய விதையை விதைப்போம் .
சங்கம் சம்பளத்துக்குப் போராட வேண்டும்தான் ,சரிதான்.ஆனாலும்  வேலை பற்றிய அறிவை யார் தரப் போகிறார்கள்?

நூறு ஆண்டுகள் கண்ட சினிமா என்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. நூற்றாண்டு கண்ட சினிமாவில் மேலைநாட்டு சினிமாவுடன் நாம் வேறுபட்டு மாறுபட்டுக்கொண்டிருக்கிறோம். நூற்றாண்டு  கண்ட சினிமாவுக்கான கல்வி முறை இங்கு வகுக்காதது பெரிய குறை.  இங்கே பிரச்சினைகள் பல வருகின்றன. பிரச்சினைகள் பலவற்றின் காரணமாக இருப்பது ,இந்தத் துறையில் நமக்குப் பரிபூரண அறிவு இல்லாதுதான். எல்லா சங்கங்களிலும் பிரச்சினைகள் உண்டு. காஸ்ட்யூமர் முதல் டைரக்டர் வரை பிரச்சினைகள் உண்டு. ஆனால் அடிப்படை கல்வி முறை இல்லாதது  இங்கே பெரியகுறைதான்.

நடிகர் சங்கமே இப்போதுதான் தத்தி தத்தி கற்று வருகிறோம். சரித்திரம் அறிதல்  என்கிற அணுகுமுறை இளைஞர்களிடம் இல்லை  இது என் வருத்தம். கோபமும் கூட. .  சரித்திரம் தெரிய வேண்டும். கடந்த காலச் சரித்திரம் அறியாமல் எதிர்காலத்தை உருவாக்க முடியாது.

கடந்த காலச்சரித்திரத்தை அறியும் ஆர்வம்  உங்கள் இந்த இணையதள முயற்சியில் தெரிவது அழகு.  சங்கம் சம்பளம் என்கிற தளத்திலிருந்து அறிவு தளத்திற்குச் செல்ல வேண்டும். கலைஞன் நிம்மதியாக தூங்க ,துறை சார்ந்த அறிவுதான் தேவை. எங்கள் சங்கத்துக்குக் கூட அனுபவம் இல்லை. செயல்பட அனுபவம் தேவையில்லை. அறிவுதான் தேவை. நாங்களும் பயிற்சிப் பட்டறை போன்றவற்றில் உங்களுடன் இணைந்து செயல் பட விரும்புகிறோம். ” இவ்வாறு நாசர் பேசினார்.

விழாவில்  தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், செயலாளர் பி. கண்ணன் ,துணைத் தலைவர் ராஜீவ்மேனன் ஆகியோர்  சங்கத்துக்கான இணைய தளத்தின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.,மூத்த ஒளிப்பதிவாளர்கள் எம்.ஏ.இரானி, ராபர்ட் ராஜசேகர் என அறியப்பட்ட ராபர்ட்ஆசீர்வாதம் ,பிரசாத் லேப் சிவராமன் ஆகியோரும் பேசினர். ஏராளமான ஒளிப்பதிவாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.   முன்னதாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்  இணைய தளத்தைக் காட்சிப் படுத்தி விளக்கினார். இளவரசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

நிறைவாக சங்கத்தின் துணைத் தலைவர் ப்ரியன் நன்றி கூறினார்.

Thanks to tamilcinemareporter.com(source)

x
^