அதிகாலையின் பொன்னிற ஒளி

Jan 21 2017

Views: 3084

அதற்கு முன்பே நான் பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்திருந்தேன். மதுரையில் நண்பர்களின் அறையில் சிறிய தொலைக்காட்சிப்பெட்டியில் தந்தையும் மகனும் தொலைந்த சைக்கிளைத்தேடி அலைவதைப் பார்க்கும்போதுதான் எனக்கு திரைப்படம் குறித்த உண்மையான புரிதல் ஏற்பட்டது.படம் முடிந்து சிவகங்கைக்குப் பேருந்தில் திரும்பும்போது என் மனதில் சில கேள்விகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தன.ஒரு திரைப்படம் இப்படியும் இருக்குமா? இது போல திரைப்படங்கள் ஏன் தமிழில் இல்லை?இந்தக் கேள்வியோடு அதுவரையில் தமிழ்த்திரைப்படங்கள் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் கலையத்துவங்கி இருந்தது.

அதற்குப்பிறகு எனக்குப் பிடித்ததெல்லாம் அகாலத்தில் தூர்தர்சனில் வரும் படங்கள் .அப்போது என் சித்தி வீட்டில் ஒரு கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது.வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்க்க பாட்டி வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி இருக்கிற சித்தி வீட்டுக்கு நடந்தே போவேன்.அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளின் மதியத்தில் அல்லது இரவு பதினோரு மணிக்குமேல் சில படங்கள் வரும். காக்கைகள் கரையும் சத்தத்துடன் யாருமேயில்லாத தெருவில் இந்தக் கடைசியிலிருந்து அந்தக்கடைசி வரை ஒருவர் நடந்து போகிற நீண்ட காட்சிகளையும் நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது சித்தி வீட்டிலிருந்த அனைவரும் என்னை வினோதமாகப் பார்க்கத் துவங்கினார்கள்.அதன் பிறகு இது மாதிரிப்படங்கள் தொலைக்காட்சியில் வந்தால் ‘அண்ணே உங்க படம் ‘என்று தங்கைகள் நகைப்புடன் எழுந்து செல்ல நான் மட்டுமே தொலைக்காட்சியின் முன்னால் இருந்தேன். டெல்லியில் திரைப்பட விழா நடக்கும்போது அதில் வருகிற படங்கள் தூர்தர்சனில் வரும்.அதில் பெயர் நினைவில் இல்லாத பல வெளிநாட்டுப் படங்களையும் பிறவி,தாசி முதலானஇந்தியப்படங்களையும் பார்த்தேன்.

அப்போதுதான் Deep Focus,சலனம்,பதேர் பாஞ்சாலி,சார்லி சாப்ளின், மக்களைத் தேடும் கலைஞன்,மரபை மீறிய சினிமா,மதுரை நன்மை தருவார் சந்தில் அன்னம் புத்தக நிலையம்,பேலபேலாஸின் சினிமாக்கோட்பாடு, எல்லாம் அறிமுகமாகி இருந்தது. எல்லா அறிமுகங்களும் எனக்குள் இருந்த ஒரு கேள்வியை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே இருந்தன.தமிழில் ஏன் இதுபோல ஒரு படம் கூட இல்லை?தமிழில் ஏன் யாருமே இது மாதிரிப்படங்களை எடுப்பதில்லை?

இந்தப் பருவத்தில்தான் ஒருநாள் சித்தி வீட்டின் சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.
‘என்னண்னே தமிழ்ல பேசுறாங்க… அர்ச்சனால்லாம் இருக்கா….படம் பேரு..?’
‘வீடு’.
படம் பேரே வீடா?”
‘ஆமா’
‘உங்க படமா?’என்று அதே நகைப்புடன் தங்கைகள் எழுந்து செல்ல நான் மட்டும் பார்த்தேன்.
படம் முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்தே வந்தேன். வழிநெடுக கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தன.இத்தாலிய மொழியில் சைக்கிளைத்தேடுவதும் தமிழில் வீடு தேடுவதும் அந்த வயதில் எனக்குள் ஏதேதோ இணைப்புகளை உருவாக்கின.நான் விரும்பியது மாதிரி ஒருபடம் அதுவும் என் மொழியில். .

இந்தப்படம் ஏன் என்னை வசீகரிக்கிறது?ஏன் கலங்க வைக்கிறது? படத்தில் இருப்பது போலவே எனக்கு ஒரு தாத்தா இருந்ததும் அந்த நாட்களில் அப்பா எங்களுக்கென ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்ததும் நான் கட்டிடப்பொறியியல் படித்துக் கொண்டிருந்ததும் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இந்தப்படத்தை உணர்வதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.அந்தப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையிலானது எத்தனை யதார்த்தமான காதல் கதை.இருவரும் அன்பை உணர்கிற தருணங்களில் ஓர் இசை வருமே? அது ஏன் இப்படி நெகிழ்த்துகிறது? இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் வெறும் இசையா?அது என்ன ஆல்பம்?பிறகு அது how to name it என்று தெரிந்ததும் உடனே கேசட் வாங்கி படத்தில் வருகிற அந்த இசையை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டேன்.கேட்கும் போதெல்லாம் படத்தின் காட்சிகள் என் நினைவில் ஓடத்துவங்கின.

படம் முடிந்து பல வருடங்கள் கழித்தும் சில காட்சிகள் சித்திரம் போல என் மனதில் இருந்தன.நிழற்படத்தின் மீது காதல் கொண்டு கேமராவுடன் சுற்றிய அந்த நாட்களில் இந்தப் படத்தின் காட்சிகளில் இருந்த ஒளியமைப்பும் என்னை வசீகரித்திருந்தது. பட்டுச்சேலையை வாங்க முடியாமல் சன்னலருகே நின்று அர்ச்சனா தண்ணீர் குடிக்கிற காட்சி.கடிதம் எழுதும் தாத்தாவின் முதுகிலிருந்து நகர்கிற காட்சி.அந்த மழையின் சாம்பல் நிறம்.குடையின் கீழே இருவரும் நிற்பது. இருளும் ஒளியுமான சில துண்டுக்காட்சிகள்.தாத்தாகட்டிய வீட்டைப் பார்க்க வருகிற காட்சி.அங்கு துவங்குகிற இசை-என்று படத்தில் திரும்பத் திரும்ப நினைத்துப்பார்க்க என் நினைவில் வீடு படம் ஓடிக்கொண்டே இருந்தது.ரஜினி படமும் கமல் படமும் வந்துகொண்டிருந்த காலத்தில் நான் பார்க்கிற நண்பர்களிடம் எல்லாம் ‘வீடு’ பாத்தீங்களா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.திரும்பவும் படத்தைப் பார்க்க வேண்டும் என்பது என் தீராத ஆசையாக இருந்தது.ஆனால் இந்தப் படத்தை எங்கு போய்ப் பார்ப்பது?

பிறகு விடியோ கற்றுக்கொண்டேன். என் அன்பிற்குரிய பேராசிரியர் ஷாஜஹான் கனி ,மதுரை யாதவா கல்லூரியில் வகுப்புகள் நடத்தினார்.அப்போது ஒரு மாணவர்’சார் பாலுமகேந்திரா ஒளிப்பதிவு மட்டும் அழகாக இருக்கிறதே ஏன்?’என்று கேட்டார்.அதற்கு ஆசிரியர்,’இதற்கு பதில் சொல்லவேண்டுமெனில் நாளை அதிகாலை சூரியனின் முதல் கிரணம் வரும்போது வெளியிலிருக்கும் அரச மரத்தடியில் எல்லோரும் இருக்க வேண்டும் என்று சொன்னார்.சிவகங்கையிலிருந்து மூன்று மணிக்கு எழுந்து மதுரைக்குப் போகும் முதல் பேருந்தைப்பிடித்து கோரிப்பாளையத்தில் இறங்கி ஊமச்சிகுளம் நகரப்பேருந்தைப் பிடித்து யாதவா கல்லூரி வருகையில் வைகறை.சூரியன் இன்னும் உதயமாகவில்லை.கேமரா என்னிடம் இருந்ததால் அரச மரத்தடியில் காத்திருந்தேன்.அப்போது அங்கு மாணவர்கள் யாருமில்லை.ஆசிரியரும் இல்லை.

சூரியன் வருவதற்காக அடிவானம் சிவந்துகொண்டிருந்தது.அங்கிருந்த பணியாள் ஒருவர் நீண்ட வாரியலுடன் அரசமரத்தடியில் கிடந்த இலைகளைப் பெருக்கத் துவங்கினார். மெல்லத் தூசி எழும்பியது.
உதயம் உணர்ந்து நான் கேமராவை தயார் நிலையில் வைத்திருந்தேன்.ஆரஞ்சு நிறத்தில் சூரியன் எழ , முதல் கிரணங்கள் தூசி மிதந்த அரசமரத்தின் வழியே ஆயிரம் விழுதுகளாகச் சிதறின. நான் பதிவுசெய்தேன். அன்றைய வகுப்பில் அசிரியர் நான் எடுத்த காட்சியைக் காட்டியதும் எல்லோருக்கும் வியப்பு.’பாலுமகேந்திரா சார் போட்டோகிராபி மட்டும் அழகா இருக்குன்னா அதன் ரகசியம் இதுதான்’என்றார் ஆசிரியர்.மாணவர்கள் வெளியில் வந்து அந்த மரத்தைப் பார்த்தார்கள்.காட்சியின் அழகு வடிவங்களில் இல்லை.ஒளியில் இருக்கிறது. அந்த ஒளியின் சூக்குமம் அதிகாலையில் இருக்கிறது.எனவே அதிகாலையில் உலகைப் பாருங்கள்.
ஏற்கனவே ஒரு நிழற்படக்காரனாக அதிகாலையும் அதன் ஒளியும் எனக்குப் பரிச்சயம்தான் என்றாலும் அன்று உணர்ந்த பாடம் புதுமையானது.அந்த அதிகாலையின் பொன்னிற ஒளியின் ஆசிரியராக பாலுமகேந்திராவே இருந்தார்.

பருவங்களும் பொழுதுகளும் கடந்து சென்றன.நான் சென்னைக்கு வந்தேன்.சந்திக்க விரும்பும் மனிதர்களின் பட்டியலில் ரகசியமாக பாலுமகேந்திரா என்ற பெயரையும் வைத்திருந்தேன்.
ஒளிப்பதிவு உதவியாளராகும் தீவிர முயற்சியில் என் ஆசிரியர் பி.சி ஶ்ரீராமைச் சந்தித்துக்கொண்டிருந்தேன்.எப்போது நிகழும் என்று தெரியாமல் வாய்ப்புக்காக காத்திருப்பது மட்டுமே சாத்தியமாகியிருந்த அந்த நாட்களில் தற்காலிகமாக ஒரு பகுதி நேர வேலையில் சேர்ந்தேன்.அப்போது மகாலிங்க புரத்தில் இருந்த பிலிமாலயா பத்திரிக்கையில் வடிவமைப்பு ஓவியரின் உதவியாளராகச்சேர்ந்தேன்.சேர்ந்த முதல் நாளே அந்த அங்கிருந்த தலைமை ஓவியர் ‘உருவப்படங்கள் வரையத் தெரியுமா என்று கேட்டார்.தெரியும் என்றேன்.இதை வரையுங்கள் என்று அவர் கொடுத்தது தொப்பியுடன் தலை குனிந்திருக்கும் பாலுமகேந்திரா அவர்களின் படம்.வரைந்து கொடுத்தேன்.நான் வரைந்த படம் முதன்முதலாக அச்சில் வருகிற ஆர்வத்துடன் மறுநாள் அலுவலகம் போனேன்.’செழியன் இது எப்படி இருக்கு பாருங்க’என்று தலைமை ஓவியர் தான் வரைந்த படத்தைக் காட்டினார்.வாங்கிப்பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அந்த ஓவியர் வரையவில்லை.நிழற்படத்தை ஜெராக்ஸ் எடுத்து அதன்மேல் புள்ளிகள் வைத்து அதைத் தான் வரைந்தது என்று காட்டினார்.அந்த போலித்தனத்தின் மீது கோபம் வர அன்று மாலையோடு வேலையை விட்டேன்.மூன்று நாட்களே பணிசெய்த என் வேலையிலிருந்து விலகினேன்.மகாலிங்க புரத்திலிருந்து தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வரை நடந்து வரும்போது ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை.சினிமாவைத் தவிர எந்த வேலையும் செய்யாதே ‘என்று அன்று நான் எடுத்துக்கொண்ட மன உறுதிக்கும் பாலுமகேந்திராவே மறைமுகமான காரணமாக இருந்தார்.

என் அன்பிற்குரிய இயக்குனர் சீமான் ‘என்கூட இருங்க..சும்மா வேடிக்கை பாருங்க..’என்று சொல்லி தனது ‘வீரநடை’ படத்தில் உடனிருக்கும் வாய்ப்பை அளித்தார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.முதல் நாள் படப்பிடிப்புக்குப் போகிறோம் என்கிற பரவசம். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி சாலிகிராமத்திருந்த என் அறையிலிருந்து கிளம்பி முத்து மூவிஸ் அலுவலகம் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தேன்.மணி அப்போது அதிகாலை ஐந்து இருக்கலாம். தெருவில் நடமாட்டமில்லை.தெரு விளக்கின் வெளிச்சத்தில் நான் நடந்து வந்த போது தெருவின் எதிர் முனையில் இருந்து திடகாத்திரமான ஒரு உருவம்.தலைப்பாகை கட்டிய அந்த மனிதர் நடைப்பயிற்சிக்காக வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.இருவருக்குமான தொலைவு குறைந்து கொண்டே வந்து அருகில் அவர் வருகையில் இது யாரோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று யோசிக்கும்போதே ‘பாலுமகேந்திரா ‘என்று நினைவு வர நின்றேன். என் முதல் முதல் நாள் படப்பிடிப்புக்காக நான் செல்லும்போது எதிரில் வருகிறார்.பிரமிப்பு கலையாமல் நின்று பார்த்துகொண்டே இருந்தேன்.தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் தூரத்தில் அவர் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

நான் இருக்கிற சாலிகிராமத்தில்தான் அவரும் இருக்கிறார் என்பதில் ஒரு சிலிர்ப்பு. ஒருநாள் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் ‘வாங்க செழி அவர்கிட்ட நான் கூட்டிப்போறேன்’ என்று சீனி என்னை அழைத்துப் போனான்.சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில் இருந்த ஒரு தனி வீடு.மாடிப்படிகள் ஏறி உள்ளே நுழைந்ததும் என் மதிப்பிற்குரிய பாலுமகேந்திரா இரண்டு கைகளின் விரல்களையும் பிணைத்து மோவாய் தாங்கி உட்கார்ந்திருந்தார்.அந்த சந்திப்பு சுவாரஸ்யமமாக இல்லை.வெறுமனே ஒரு பிரபலத்தைப் பார்த்து திரும்புகிற மகிழ்ச்சியும் அடிமனதில் ஏமாற்றமும் இருந்தது.

பாலுமகேந்திரா என்கிற பெயரை நான் எப்போதும் அதிகாலையின் ஒளியுடன் சேர்ந்தே உணர்கிறேன்..சிறுவயதில் திரையரங்கம் முழுக்க கைதட்டல்களுடன் பார்த்து வியந்த சூரியோதயங்கள்,அடிவானங்கள்,பனிமிதக்கிற வைகறைகள்,அடிப்பெண்ணே பாடலில் நனைந்த ஷோபாவின் புன்னகை,விபச்சார விடுதியில் அமர்ந்திருக்கிற கமலஹாசனின் மௌனம்,நல்லதோர் வீணை செய்தே பாடலில் பாண்டி பஜாரில் நடந்து செல்லும் ரேவதி,அழியாத கோலங்களில் அந்த மூக்குக் கண்ணாடியின் அண்மைக் காட்சி,யாத்ராவின் கார்த்திகைச் சுடர்கள்,இருள் என்பது குறைந்த ஒளியெனச்சொல்லும் சிறைக் காட்சிகள்,’கனவு காணும் ‘பாடலில் ஆட்டோவில் படுத்திருக்கிறவரின் கால்கள்.வீட்டுக்குள் கேமரா மட்டும் நகர்ந்து செல்கிற நீண்ட காட்சி.(Misen scene ),கறுப்புத்திரையில் ஓடும் சத்தமில்லாத டைட்டில்கள்,அதிர்ந்து பேசாத மனிதர்கள்,மெல்லிய அங்கதம், பின்னொளி,சன்னல் ஓரம், ஈரமான மலைநகரம்,தூங்கி எழுந்தது போல ஒப்பனை இல்லாத முகங்கள்.பெரிய கண்களுடன் பெரிய பொட்டும் வைத்து பருத்தி உடை அணிந்த மாநிறப் பெண்கள்,என ஒருபுறம் அழகின் உபாசகம்.இன்னொரு புறம் படைப்பின் காத்திரம்.காட்சியின் இயைபில் நேர்த்தி. துடைத்துக் கழுவிய ஒழுங்கு. இன்னொருபுறம் நவீனம்,தகுநயம்(style). பாலுமகேந்திரா என்றால் திரைமொழியில் ஓர் ஆழ்ந்த மௌனம்,அதுவும் விசும்பல் இல்லாமல் கண்ணீர் மட்டும் ரகசியமாய் வழிகிற மௌனம்,நதி நீரின் சிலிர்ப்பில் சத்தமில்லாமல் அடி ஆழத்தில் புரளும் கூழாங்கற்போல காமம்.வணிகத்தின் விளிம்புகள் தெரிந்து நுனி உடையாமல் பென்சில் சீவுகிற லாவகத்தோடு மௌனமும், காமமும் ,அன்பும் ,காதலும் இயைந்து பின்னுகிற பூத்தையல் அவருடையது. லா.ச.ராவின் ‘புத்ர’ படிக்கையில் காய்ச்சல் வந்தது.மூன்றாம் பிறை பார்த்ததும் அதுவே நிகழ்ந்தது.

அதன்பிறகு அவருடன் ஓர் அறிமுகம் கிடைத்தது.பொன்னியம்மன் கோயில் சந்து அலுவலகத்தில்,சாலிகிராமம் சினிமாப்பட்டறையில் கறுப்புத்தேனீரும் தேனும் கலந்த சில சந்திப்புகளில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் அவரிடம் கேட்பேன். ஒன்று நீங்கள் எப்படி திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பதிவு செய்வதன் வழியே உங்கள் ஆளுமையை நிறுவுகிற ஆவணப்படம் ஒன்றை எடுக்க வேண்டும். இரண்டு – ‘வீடு’ படத்தை திரும்பப் பார்க்க வேண்டும்.’நெகடிவ் போயிருச்சுப்பா..டிவிடி கூட இல்ல’ இதுதான் அவரது பதிலாக இருந்தது.நான் எனது கட்டுரைகளில் தமிழின் சமரசமே இல்லாத படங்களாக எனக்குதெரிபவை அக்ரஹாரத்தில் கழுதை,வீடு,சந்தியா ராகம் என்று எழுதிக்கொண்டிருந்தேன்.ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த மூன்று படத்தையும் திரும்பப் பார்க்கப் பிரதிகள் இல்லை.

கடந்த மாதத்தின் ஒருநாள் என் அன்பிற்குரிய பாலுமகேந்திரா அவர்களைச் சந்தித்த போது எனக்கு அவர் இரண்டு குறுந்தகடுகள் கொடுத்தார். ஒன்று வீடு.இன்னொன்று சந்தியா ராகம்.வீட்டுக்கு வந்ததுமே சந்தியா ராகம் பார்த்துவிட்டேன்.ஆனால் வீடு படத்தைப் பார்க்க ஏதோ ஒரு மனத்தடை இருந்தது.காரணம் அது என் தனிப்பட்ட நினைவுகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.சென்னை வந்த புதிதில் ஒருநாள் தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் அஞ்சல் நிலையத்தில் கடிதங்கள் வாங்குவதற்காகப் போனபோது இன்னொருபுறம் ஒரு நீண்ட வரிசை நின்றது.அதில் சொக்கநாத பாகவதரும் நின்றுகொண்டிருந்தார்.நான் ஓரமாக நின்று அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.வரிசை மெதுவாக நகர அவரும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தார்.மழிக்கப்படாத முகத்துடன் படத்தில் இருப்பதுபோலவே நேரிலும் இருந்தார்.போய்ப் பேசி இருக்க முடியும் என்றாலும் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனெனில் அது வீடு படத்தின் ஒரு காட்சி போலவே நிகழ்ந்து கொண்டிருந்தது.

என் மேசையில் வீடு படத்தின் குறுந்தகடு ஒருமாதமாக இருந்தது.தொலைவில் நின்று சொக்கநாத பாகவதரையும் அதிகாலையில் நடந்து சென்ற பாலுமகேந்திரா அவர்களையும் பார்த்துக்கொண்டு நின்றது போல வீடு படத்தின் குறுந்தகடையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.படத்தைப் பார்க்க விருப்பமாய் இருக்கிறது. ஆனால் பார்க்கும் மன நிலை கூடிவரவில்லை.ஒரு பொழுதில் இனிமேல் பார்க்காமல் தாங்காது என்கிற கணம் தாகம் போல வரும்.கதவை அடைத்துக் கொண்டு அப்போதுதான் பார்க்க முடியும்.ஏனெனில் படம் பார்ப்பது அதுவும் பிடித்த படத்தைத் திரும்பவும் பார்ப்பது என்பது பழைய தோழியைச் சந்திப்பது போல.அதற்கென ஒரு நேரமும் மனமும் கனிய வேண்டும்.சில முன் தயாரிப்புகள் வேண்டும்.இப்போது இந்த வீட்டைத்திறந்தால் பழைய காலத்தையும் நான் சேர்த்துத் திறக்க வேண்டும்.இன்று என் தாத்தா இல்லை.அப்பா ஆசையாய்க் கட்டிய வீடு அம்மா இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. தங்கைகள் மனதளவில் வெகுதொலைவில் இருக்கிறார்கள்.இறந்தகாலத்தில் இருக்கிற எல்லா நினைவுகளையும் சேர்த்துத் திறக்க வேண்டுமா?முடியுமா?

எல்லாவற்றுக்கும் ஒரு நாள் வரவேண்டுமே..அந்த நாள் வந்தது.

அலுவலகம் போனபோது ‘இன்னிக்கு வீடு படத்தோட ஸ்க்ரீனிங் இருக்கு போகலாமா?’என்று பாலா கேட்டார்.நேரே கிளம்பி பிரசாத் அகாடமியில் இருக்கும் திரையரங்கத்திற்கு வந்தோம்.’படம் இப்பதான் போட்டாங்க. சார்…அரை மணிநேரம் இருக்கும்’என்று எங்களை அழைத்துச் சென்ற மாணவன் சொல்ல கதவைத் திறந்து பாலா நுழைந்தார்.அவருக்கு இடம் இருந்தது.நான் கதவருகே நின்றேன். இமைக்கும் நேரத்தில் அந்த ஒரு காட்சிதான் பார்த்தேன். எனக்குப்பிடித்த இசைக்கோர்வையில் சென்னையின் மழைத் தெருக்களில் அந்த இளைஞனும் பெண்ணும் நடந்துகொண்டிருந்தார்கள்.அரங்கம் அமைதியாக இருந்தது. திறந்த கதவருகே இருளில் நின்ற நான் திரும்ப வெளியில் வந்தேன்.
‘பாதியிலிருந்து எப்படிப் பார்க்க முடியும்?’
‘என்னைப் பார்க்காமல் காத்திருக்க வைத்தாய்.இப்போது உன்னைச் சந்திக்கும் மனநிலை எனக்குக் கூடிவரவில்லை.தேடி வந்ததற்காக ஒரு Frame பார்த்தாய்.போதும் வெளியில் இரு.”
“ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டுமே..’
‘நான் உன்மேசையில் ஒருமாதம் காத்திருந்தேனே..’
வெளியில் வந்தேன்.இடையிடையே கதவு திறக்கும் போது அந்த இசைக்கோர்வை கூடக் கேட்காத தொலைவில் காத்திருந்தேன்.அருகில் இருந்துகொண்டே பிடித்தவரைப் பார்க்காமல் பார்க்கமுடியாமல் தவிர்ப்பதும்,தவிப்பதும் ஒரு அற்புதமான உணர்வு.அது அப்போது எனக்குப்புரிந்தது.
படம் முடிந்ததும் அரங்கத்தில் விளக்குகள் எரிய வெறும் திரையின் முன் எளிய சந்திப்பு நடந்தது. ‘இன்று பாகவதர் இல்லை செந்தாமரை இல்லை’ என்று பாலு சார் பேசத்துவங்குகையில் திரும்பவும் நான் வெளியில் வந்தேன்.

படத்தை முழுதாகப் பார்க்கும் தாகத்துடன் வீட்டுக்கு வந்தேன்.கறுப்புத்திரையில் நடுங்கும் எழுத்துக்களுடன் ‘வீடு’. பாகவதரின் பாடல்.எழுத்துக்கள் முடிந்து படம் துவங்குகிறது.ஓளியையயும் நிழலையும் ஒரு விகிதத்தில் கலந்து அவர் பதிவுசெய்திருக்கிற நேர்த்தில். முதல் சட்டகத்திலிருந்து எனக்கான பாடமும் துவங்குகிறது.கதை எளிமையானதுதான்.இருக்கிற வீட்டைக் காலி செய்யச் சொல்லிக் கடிதம் வருகிறது. வாடகை வீட்டிலிருந்து இன்னும் அதிக வாடகைக்குப் போவதற்குப் பதிலாக சிறிதாக ஒரு வீடு கட்டினால் என்ன?என்ற யோசனையுடன் வீடு கட்ட எடுக்கிற முயற்சி எடுக்கிறார்கள். நடுத்தரக் குடும்பத்தின் இயலாமைகள், எளிய விருப்பங்கள்,அதில் ஏற்படும் தடைகள்,இருளில் செல்லச் செல்ல வெளிச்சம் துலங்குவது போல அந்த கஷ்டத்தின் ஊடாக நம்பிக்கைகள். வீடு கட்டிமுடிக்கப் போகையில் என்ன நடக்கிறது? ஒரு திறந்த முடிவு. ஒரு வரிக்கதை இதுதான்.
‘வீடு கட்டிப்பார்’என்கிற பழைய தமிழ்ப் பழமொழியின் விரிவான திரைவடிவம்.

எல்லோரது வீட்டிலும் இதுதானே நடக்கிறது?யாரால்தான் வீட்டை எளிதாகக் கட்டி முடிக்க முடியும்?இதில் சிலாகித்துச் சொல்ல என்ன இருக்கிறது?
ஒரு திரைக்கதையில் எது உயிர்ப்பைக் கொடுக்கிறது?கதாபாத்திரங்கள். அவர்களின் குணாதிசயங்கள்.
அவர்களின் உணர்வுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள்.மாற்றங்கள்.எனவே வீடு படத்தைப்பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

இயல்பு வாழ்க்கையில் ஒரு மனிதன் தனது குணத்தை பெரும்பாலான நேரங்களில் மாற்றிக்கொள்கிறான்.ஆனால் அதையே திரைக்கதையாக மாற்றும்போது சில வருடங்களை அல்லது சில மாதங்களை சில மணிநேரங்களில் சொல்ல வேண்டும். ஒரு இயக்குனருக்கும் திரைக்கதையாளருக்குமான சவால் இந்தத் திரை நேரத்தில்தான் இருக்கிறது.வணிகப்படங்கள் இந்த திரை நேரத்தை மறக்கவைக்கவே முயற்சி செய்கின்றன. படத்தொகுப்பின் வேகமும்,அதிகமான அண்மைக்காட்சிகளும் கதை நடக்கும் காலம் இடம் இரண்டையும் மழுப்பி விடுகின்றன.எனவே கதை நிகழ்கிற 150 நிமிடங்களை விரைவில் கடந்துவிடுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தவே வணிகப்படங்கள் முயல்கின்றன. அதுதான் அவற்றின் சமன்பாடு,தந்திரம்,யுக்தி எல்லாம்.

ஆனால் திரைமொழியை ஓர் ஆளுமையுடன் கையாள்கிற இயக்குனருக்கு அது வணிகப்படமாக இருந்தாலும் எதையும் மழுப்பும் அவசியம் ஏற்படுவதில்லை.ஏனெனில் அவர் காலத்தை மறக்க வைக்க முயல்வதில்லை.காலத்தில் நிலைநிறுத்தவும் காலத்தில் செதுக்கவும் விரும்புகிறார்.வீடு படம் பார்த்து 20 வருடங்கள் கழித்தும் அதன் காட்சிகள் மனதில் நிற்கின்றன.எப்படி? ஏன்? ஒரு நல்ல படம் நமது ஆழ்மனதில் ஒரு நினைவைப்போல நம் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல ஒரு அனுபவமாகத் தங்கிவிடுகிறது.ஏனெனில் படம் பார்க்க நம் வாழ்க்கையின் இரண்டு மணிநேரத்தைச்செல்வழிக்கிறோம்.இந்த இரண்டுமணி நேரத்தில் ஒரு மனிதரைச் சந்திப்பதைப் போல திரைப்படத்தையும் சந்திக்க வேண்டும். வேடிக்கை மட்டுமே பார்க்கையில் ஒன்றும் நடப்பதில்லை. ஈடுபடும்போதே அது அனுபவமாகிறது.வீடு’அவ்வகையான ஒரு அனுபவம்.

முதலில் கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை எடுத்துக்கொள்ளலாம்.குணாதிசயம் என்பது என்ன?செயல்கள். இந்தக் கதாபாத்திரம் பற்றிய இலக்கணத்தை வகுக்கிற மேலை நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் ஒரு கதா பாத்திரத்துக்கு மூன்று விதமான குணங்கள் இருக்கவேண்டும் என்கிறார்கள்.ஒன்று வீட்டில் இன்னொன்று வெளியில் அல்லது அலுவலகத்தில் மூன்றாவது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தனிமையில் இருக்கும்போது அந்தக் கதாபாத்திரம் என்ன செய்யும்?இப்போது படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான சுதாவை எடுத்துக்கொள்ளலாம்.கதையின் முதல் காட்சியில் பணத்தைக் எண்ணிப் பார்க்கையில் அறிமுகமாகிறாள்.வீடு மாற்றினால் ஏறும் வாடகையைக் குறித்துக் காதலனிடம் பேசுகிறாள். பேருந்தில் பயணிக்கும்போதும் உணவகத்தில் சாப்பிடும்போதும் அவள் பணத்தையும் செலவையும் மட்டுமே கணக்கிடுகிறவளாக இருக்கிறாள்.தங்கை திருமணத்திற்காக சேமிக்கிறாள். ஆனாலும் அவள் பணத்தை மட்டுமே பிரதானமாக கருதுபவள் அல்ல. தாத்தா கோபியைக் குறைத்துப் பேசும்போது ‘பேங்க் பேலன்ஸ் பார்த்தா லவ் பண்ண முடியும் ‘என்று கோபப்படுகிறாள்.அதில் இயல்பும் இருக்கிறது. குணாதிசயமும் இருக்கிறது.இந்த முரண்தான் சுதா.

ஒரு வாடகை வீட்டுக்குப் போகும்போது வாடகையைக் குறைக்க என்ன தொனியில் வேண்டிக் கேட்கிறாளோ அதே தொனியில் இடத்தை விற்கும்போது ‘ஒரு 5000 கூடக் கெடச்சா’ என்று கேட்கிறாள்.தங்கை தனக்காக ஒரு அறை கூடுதலாகக் கேட்கும்போது யோசிக்கிறாள். மழை பெய்தால் 150 ருபாய் மோட்டர் செலவாயிருச்சு என்கிறாள்.எப்போதும் பணம் குறித்துப் பேசுகிற அவள் தனது நகையை அடகு வைக்கிறாள்.விற்கவும் முடிவு செய்கிறாள். ஆனாலும் தன் காதலன் தனது தங்கைக்காக வைத்திருக்கும் பணத்தை எடுக்க அவள் சம்மதிப்பதில்லை.அதற்காக கோபிக்கிறாள்.தங்கை பட்டுப்பாவாடை கேட்கும்போது முதலில் மறுக்கிறாள். பிறகு அலுவலகத்துக்குப் போகாமல் அவளுக்கான பட்டுப் பாவாடையுடன் காத்திருக்கிறாள்.ஆனால் தனக்கான ஒரு பட்டுப்புடவை பரிசாக வரும்போது அவளால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அதை மறுக்கவும் முடிவதில்லை.அங்கும் பணத்தைக் கணக்குப் பார்க்கிறாள்.அழுகிறாள். ஆனாலும் அதே புடவையை விருப்பமாகக் கட்டிக்கொண்டு தன் காதலனைப் பார்க்க வருகிறாள்.நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் முரண்கள் அதுதான்.விருப்பத்துக்கும் இயலாமைக்கும் இடையிலான தவிப்பு.வீட்டில் சிமிண்ட் திருடிய பொறியாளரைத் தட்டிக்கேட்க அவளுக்குத் தைரியம் இருக்கிறது. ஆனால் அலுவலகத்தில் தன்னையே கேட்கிற அதிகாரியை எதிர்த்து எதுவும் செய்ய முடிவதில்லை.காதலனிடம் அழமட்டுமே முடிகிறது.

ஒரு கதாபாத்திரத்தில் எத்தனை வண்ணங்கள்.எத்தனை ஏற்றத் தாழ்வுகள்.ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் தாய்மை,ஏழ்மை,சிக்கனம்,பெருந்தன்மை,காதல்,கோபம்,இயலாமை என சகல பரிமாணங்களும் ததும்பி நிற்கிற போது அந்தக் கதாபாத்திரம் உயிர் பெறுகிறது.

அதுபோல தங்கையை எடுத்துக்கொண்டால் வாடகைக்கு வீடு பார்க்கும்போதும் தனக்கான அறையைக் கேட்கிறாள்.வீடு கட்டும் செலவுகள் குறித்துக் கலங்கி நிற்கும்போதும் தனக்கான தனி அறையைக் கேட்கிறாள்.அந்தக் கஷ்டத்திலும் பட்டுப்பாவாடை கேட்கிறாள்.பிறகு சமாதானம் கொண்டு பழைய பாவாடையை எடுத்து வைத்துவிட்டு பள்ளிக்குப் போகிறாள். பிறந்த நாளுக்கு வடை பாயசம் கேட்கிறாள். பிறந்த நாளுக்கு அக்காவுக்கு வந்த புடவையை விரித்து தன்மேல் வைத்து அழகு பார்க்கிறாள். அந்த வயதுக்குரிய பிடிவாதம் இருந்தாலும் அக்கா பட்டுப்பாவாடை வாங்கித் தரும்போது கலங்குகிறாள். தாத்தாவுக்கு இரவு மருந்து கொடுக்கிறாள். ‘என்னையும் ‘என்று தாத்தா மடியில் வந்து குழந்தையைப்போல படுத்துக்கொள்கிறாள். ‘உங்க அவங்க’ என்று செல்லமாகக் கேலி பேசுகிறாள். ‘என்னம்மா ஸ்கூல்ல இருந்தா..இல்ல அங்கிள் ஆபீஸ்ல இருந்து’என்று கிண்டல் செய்கிறாள்.அவள் வயதுக்குரிய தன்முனைப்பும், குறும்பும் ,கோபமும்,தன் நலமும்,செயல்களின் வழியே எவ்வளவு அழகாக அந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கிறது.

தாத்தா கதாபாத்திரம் முழுப்படத்திற்கும் இதயமாக இருக்கிறது.ஒரு ஓய்வு பெற்ற பாட்டு வாத்தியார். எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்.வீடு நம்மால கட்டமுடியுமா என்று பேத்தியிடம் கேட்பார்.அவள் தாத்தாவைத் திட்டியதும் ‘சரிம்மா இப்படி வா’ என்பார்.பேத்தி நகையை விற்கிறேன் என்று சொன்னதும் குடும்பத்தலைவராக முடிவு எடுப்பார்.கண்டிப்பும் தாராளமும் கனிவும் கோபமும் எத்தனை சாயைகளில் வெளிப்படுகிறது.
‘அவனுக்கே அவ்வளவு சுமை.அவந்தான் ஒத்தாசை பண்ணப் போறானுக்கும் ..இப்படிப் போய் ஒருத்தனைப் புடிச்சியே ‘என்று பேத்தியைத் திட்டுகிற அவர், கோபி வீட்டுக்கு வரும்போது ‘சுதாவை நீ கட்டிக்கிருவீல்ல..இந்துவும் உன் தங்கச்சி மாதிரிதான் ‘என்று கலங்குகிறார்.முதுமையின் இயலாமையும். கோபமும்,வாழ்க்கை குறித்த பாதுகாப்பின்மையும் அன்பிலிருந்தே துவங்குகிறது.
சமீபத்தில் மைக்கேல் ஹெனகேயின் Amour பார்த்தேன்.உடல் நலமில்லாத தன் மனைவிக்கு உணவு ஊட்டுகிற அதே கைதானே அவளை அடிக்கவும் செய்கிறது.கோபம் கூட அன்பின் தீவிர நிலைதானே.

கோபி ஆதரவாக இருக்கிறான். பேருந்தில் சுதா அழும்போது ‘எல்லோரும் பாக்கிறாங்க’என்று சொல்கிற அவன்தான் உணவகத்தில் தன் பணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கையில் கோபப்பட்டு எல்லோரும் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கத்துகிறான்.எல்லோருக்கும் அவரவருக்கான தருணங்கள் இருக்கின்றன.அன்பு செய்யவும் கோபம் காட்டவும் காரணங்கள் இருக்கின்றன.

தாத்தாவின் பாடலுடன் படம் துவங்குகிறது.கடிதம் வந்ததும் பாடல் நிற்கிறது.பிறகு மின்சார ரயிலின் சத்தம்.திரைக்கதையில் exposition என்றொரு விஷயம் குறித்துப் படித்திருக்கிறேன்.கதையின் துவக்கத்திலேயே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.அவர்கள் யாரென்று இயல்பாகச் சொல்ல வேண்டும்.’வீடு காலி செய்யச்சொல்கிறார்கள். 125 ரூபாய் வாடகையிலிருந்து 1000 ரூபாய் வாடகை கொடுக்க முடியாது. நீ பாட்டு வாத்தியார் பென்ஷன் வாங்குற,உன் பேத்தி(உறவும் சொல்லப்பட்டு விட்டது) வேலை பாக்குறா..’ முதல் காட்சியிலேயே கதையின் முக்கியமான பிரச்சனையும் கதாபாத்திரங்களும் தெளிவாக வெளிப்பட்டு விடுகிறது. அந்த தங்கை வீட்டில் இருந்தால் அவள் என்ன செய்கிறாள் என்ற குழப்பம் வரும். எனவே அவள் சீருடை அணிந்து பள்ளிக்குபோகிறாள்.பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளியிலிருந்து திரும்புகிறாள்.

இந்த exposition என்பது ,கதைக்குள் இருக்கிற விஷயங்களை தர்க்க ரீதியான கேள்விகளை விளக்க சரியான இடத்தில் தேவை கருதி மட்டுமே சொல்ல வேண்டும்.தேவையில்லாமல் பேசினால் அது தவறு.கதாபாத்திரம் யாரென்று சொல்ல வேண்டுமே என்று வலிந்து சொன்னால் அது அபத்தம்.வீடு பார்க்கும் இடத்தில் நாங்க மூணுபேர்தான் என்று சுதா சொல்லும்போது வீட்டுக்காரர் ஏன் இவங்க அம்மா அப்பா..’என்று கேட்கிறார் ‘ஆக்ஸிடண்ட்ல போயிட்டாங்க’ என்று தாத்தா சொல்கிறார். இந்தத் தகவலை படத்திற்குள் சொல்லியே ஆக வேண்டும்.வேறு எந்த இடத்தில் சொல்லி இருந்தாலும் இது திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும்.அதுபோல அய்யங்கார் தன் வீட்டினை மாதச் சம்பளத்தில் எப்படிக் கட்டினேன் என்று உணவகத்தில் சொல்கிற காட்சி, வீடு கட்டுவதில் இருக்கிற நடைமுறைகளை வெளிப்படுத்துகிறது.அதுபோலவே பொறியாளர் வீடு கட்டுவதற்கான சம்பிரதாயங்களை விளக்குகிற காட்சி.படத்தில் எங்கு தேவையோ அங்கு விளக்கம் இருக்கிறது.வானம் தோண்டுவதில், தளம் போடுவதில் விளக்க ஒன்றுமில்லை. ஆனால் பூமி பூஜையில் பதிவு செய்யவேண்டிய நம் கலாச்சாரம் இருப்பதால் விளக்கம் இருக்கிறது.

கடைசியில் இந்த இடத்தை கவர்ன்மெண்ட் அக்கொயர் பண்றதா இருக்கு..’என்று அதிகாரி சொல்ல ‘அக்கொயர் பண்றதுன்னா..’.என்று கோபி கேட்கிறான். அப்படி ஒரு விஷயம் கதாபாத்திரத்துக்கும் தெரியாது. பார்வையாளருக்கும் தெரியாது.இங்கு உரையாடலுக்கான தேவை இருக்கிறது. விளக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு அளவு இருக்கிறது. ஒரு திரைக்கதையாசிரியருக்கு மிகவும் சவாலானதே இந்த வெளிப்பாடு (exposition) தான்.அது இப்படம் முழுக்க மிகத் திறமையாகக் கையாளப்பட்டுள்ளது. அதிகாரி தன் மனைவி ஊருக்குப்போயிருப்பதாகச் சுதாவிடம் சொல்வதும் ஒருவகையான வெளிப்பாடுதான்.
ஆனால் தனக்குகீழே வேலைபார்க்கிற பெண்ணிடம் ஒரு அதிகாரி மனைவியைப்பற்றி எப்படிப் பேச முடியும்? அதற்குத்தான் பகிர்ந்துகொள்ள காபி இருக்கிறது.இதுபோல உரையாடல்களால்,காட்சிக்குள் இருக்கும் உப பொருட்களால் படம் முழுக்க திரைக்கதையின் முக்கியமான கூறாகிய exposition வெளிப்படும் இடங்கள் நேர்த்தியானவை.

திரைக்கதையில் இன்னொரு முக்கியமான கூறு என்று ஆசிரியர்கள் வரையறுப்பது நம்பகத்தன்மை(credibility) .தர்க்க ரீதியாக பார்வையாளருக்கு எந்தச் சந்தேகமோ கேள்விகளோ வராமல் கதை சொல்ல வேண்டும். இதற்கு கதையில் எதும் தற்செயலாக நிகழவே கூடாது. கதைக்குள் நிகழ்வது கதாபாத்திரத்தின் இயல்பாக இருக்க வேண்டும்.திடீரென கதையைத் திருப்புவதற்காக புதிதாக ஒரு விஷயம் செய்தால் அது நம்பகத்தன்மையை இழக்கும்.
Life is beautiful படத்தில் சிறுவனைக் குளிக்க அழைத்தால் அவன் ஒரு பெட்டிக்குள் போய் ஒளிந்துகொள்வான்.பின்பாதியில் ரசாயனக் குளியலில் இருந்து தப்பிப்பதற்காக அதேபோலவே ஒளிந்து கொள்வான்.கதைக்குள் ஒரு செயல் நடந்தால் அது கதாபாத்திரத்தின் பழக்கமாக நிகழ்வதே சிறந்ததாக இருக்கும். உதாரணத்துக்கு வீடு படத்தில் தாத்தா செய்தித் தாளைக் கையில் வைத்திருப்பார். ‘வங்கக் கடலில் புயல்’என்ற செய்தி அதில் இருக்கும்.புயலினால் மழை வரப்போகிறது என்பதைச் சொல்ல இது ஒரு இடைச்செருகல்.(insert) ஆனால் அதே தாத்தா கதையின் பின்னால் செய்தித்தாளை சத்தமாகப் படிக்கிறார்.’ஏன் தாத்தா டிவி நியூஸா வாசிக்கிற என்று சுதா சொல்கிறாள்.(அப்போது தாத்தாவின் முக பாவனையைக் கவனியுங்கள்) இந்தக் காட்சியில் அவர் ஏன் செய்தித்தாள் படிக்க வேண்டும். இந்த செய்தித்தாள் படிக்கும் பழக்கம் தாத்தாவுக்கு இல்லையென்றால் அது அவரது குணாதிசயம் இல்லையென்றால் முன்பு காட்டிய ‘வங்கக் கடலில் புயல் ‘என்பது ஒரு மூன்றாந்தரமான இடைசெருகல் ஆகி இருக்கும். எனவே கதையின் பின்னால் நடப்பதற்கான குனத்தொடர்ச்சி முன்னால் இருக்கிறது.இது போலவே அதிகாரி,பொறியாளர் என்று இருவருக்கும் அவரது செயல்களில் எல்லாம் ஒரு குணாதிசயத் தொடர்ச்சி இருக்கிறது.கதையில் எதுவும் தற்செயலாக நிகழ்வதே இல்லை.

தாத்தா முதலில் குடை கொண்டு வரும்போது குடையை விரிக்கச்சொல்லி ஒரு காய்கறிக்காரன் சொல்லுவான். தாத்தா குடையை விரிப்பார். அதே குடையை பின்னால் அவர் பேருந்தில் மறந்து செல்லுவார்.ஒரு பொருளாக இருந்தாலும் குணமாக இருந்தாலும் அதன் இருப்பு காட்சிக்குள் உணர்த்தப் படாவிட்டால் அது தற்செயலாகிவிடுகிறது.அதுபோல ஒரு மேஸ்திரியின் பொறுப்பில் முழுக்கட்டிடமும் ஒப்படைக்கப்படுகிறது.படிக்காத மேஸ்திரியால் அது முடியுமா என்ற கேள்விகள் நமக்கு வரக்கூடும். எனவே அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு அந்த மேஸ்திரி இது என்ன என்று குழம்புகிறான். மங்கா அதைத் தெளிவு செய்கிறாள்.தர்க்கரீதியான சந்தேகங்களை அடைப்பதற்கு இதுபோல யதார்த்தமான விஷயங்கள் நிறைய கதைக்குள் இருக்கின்றன.

கட்டப்பட்ட வீட்டை குடிநீர் வாரியம் கையகப்படுத்தப் போகிறது என்றால் அதற்கான முன் தொடர்ச்சி கதையில் இருக்கிறதா? அல்லது தற்செயலாக நடக்கிறதா?சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு கிணறு இருக்கிறது. ஏன்?.அந்தக் கிணற்றில் அங்கிருக்கும் பெண்கள் தண்ணீர் தூக்க வருகிறார்கள். எதற்கு? இடத்தை வாங்குவதற்காகப் பார்க்க வருகிற ஒரு பணக்காரர் அந்த இடத்திலிருந்து மூன்றாவது வீட்டிலிருக்கும் அவரது நண்பர் இரண்டு கிணறு வெட்டி இந்த ஏரியாவுக்கே தண்ணீர் வினியோகிப்பதைச்சொல்கிறார்.ஏன்? அந்த இடத்தின் தண்ணீரை வாங்கிக் குடித்தும் பார்க்கிறார்.எதற்காக?

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த இடத்தின் பின்னணியில் மெட்ரோ வாட்டரின் தொட்டி ஒன்று கதையின் துவக்கத்திலிருந்தே இருக்கிறது.எதற்கு? “ஒரு கதையில், சுவரில் துப்பாக்கி இருக்கிறது என்று எழுதினால் கதை முடிவதற்குள் துப்பாக்கி வெடிக்க வேண்டும்..’என்றொரு மேற்கோள் இருக்கிறது.இதையே நாம் தலைகீழாகச் சொன்னால் ஒரு கதையில் துப்பாக்கி வெடிக்கிறது என்றால் கதையில் முன்பே அது பற்றிச்சொல்லி இருக்க வேண்டும் . கதையின் பின்னால் வளரப்போகிற பிரச்சனை ஒரு விதையைப்போல காட்சிக்குள் ஒளிந்திருக்கிறது. தாத்தா கடைசியில் வாசலில் அயர்ந்து உட்காரும்போது இந்த மெட்ரோ வாட்டர் என்று எழுதப்பட்ட தொட்டி மட்டுமே அவரது பின்னணியாக இருக்கிறது. இவ்வளவு நுட்பமாக ஆழ்பிரதி எனப்படும் subtext ,ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை மூன்றாவது முறை பார்க்கிற பார்வையாளனுக்கு அதன் ரகசியங்கள் அவிழ்க்கிற இடமாக இருக்கிறது.எனவே நவில் தொறும் தன்மை திரைக் கதையில் இருக்க வேண்டும் எனில் கதைக்குள் எதுவும் தற்செயலாக நிகழக் கூடாது என்கிற திரைக்கதைக் கோட்பாடு மிக அழகாக இப்படத்தில் இருக்கிறது. திரைக்கதை என்றால் என்ன? என்ற கேள்விக்கு பிரபலமான மேற்கோள் இருக்கிறது.”எழுதுங்கள் ..திரும்ப எழுதுங்கள்.. திரும்பத்திரும்ப எழுதுங்கள்’என்பதுதான் அது. அவ்வாறு திரும்பத் திரும்ப நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைக்குள்தான் அற்புதங்கள் நிகழும்.வீடு படத்தில் அது நிகழ்கிறது.

கதையில் ஒன்று நிகழ்ந்தால் அதற்கான மறு செயல் நிகழவேண்டும். பதேர் பாஞ்சாலியில் துர்கா திருடிய முத்துமாலையை ஒளித்து வைத்தால் கதையின் பின்பாதியில் அப்பு அதனைக் கண்டெடுக்க வேண்டும்.சுதா நகையை வங்கியில் அடகு வைக்கிறாள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண் ‘வளையல் புதுசா..’என்று கேட்பாள். ‘கவரிங்கா’என்று திரைக்கு வெளியில் இருந்து இன்னொரு பெண்ணின் ஏளனமான குரல் வரும்.அதுபோலவே தாத்தா உயில் எழுதினால் அதை சுதா படிக்க வேண்டும்.ஒரு செயல் மறு செயலைச்சந்திக்கும் போதுதான் உணர்வு முழுமை அடைகிறது.இந்த இருப்பின் வட்டம்(circle of being) என்ற திரைக்கதையின் கோட்பாடும் தெளிவாக ஒரு பாடம் போல படத்தில் இருக்கிறது.

இந்தப் படத்தின் உரையாடல்களை மட்டும் கவனிப்பது இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம்.சுதாவின் அலுவலகத்தில் ஒரு பெண் திரும்பி,’ப்ளாட்னா பரவாயில்லையா..’ எண்று கேட்பாள். அதற்கு முன்பு பேசப்பட்ட விஷயங்கள் நமக்குத் தெரிந்தவை.எனவே உரையாடல் பாதியிலிருந்து துவங்குகிறது.இதுபோல கதையின் பல காட்சிகள் நமக்குத் தெரிந்த விஷயத்தை விட்டு விட்டு தெரியாத விஷயத்திலிருந்தே துவங்குகின்றன.அந்த இடங்களில் உரையாடல் பாதியிலிருந்து துவங்கும் அல்லது உரையாடலே இருக்காது. உதாரணமாக சுதா அலுவலகத்தில் தொலைபேசிக்காக எழுதுவருகிற காட்சிகளைச் சொல்லலாம். இந்து பட்டுப் பாவாடை கட்டி வரும்போது தாத்தா ‘உங்க அம்மா மாதிரியே இருக்க’ என்று கலங்குகிறார். சுதா, ‘வரும்போது எல்லார்கூடயும் சேர்ந்து வா..’என்று சொல்கிறாள். உரையாடல் நேரடியானதுதான் என்றாலும் இந்துவின் உடை சார்ந்து இருவரது பார்வையும் அவரவர் இயல்பிலேயே இருக்கிறது.நாயர் தங்கள் நண்பர் இறந்ததைச் சொல்கிறார்.’அவனுக்கு என்னாச்சு..”வயசாச்சு’ இந்தக் காட்சியின் துவக்கத்தில் சிறுமி தனது பிறந்தநாள் என்று வருகிறாள். வயதையும் மரணத்தையும் உரையாடலின் வழியே உணர்வதற்கான இடமாக இந்தக் காட்சி இருக்கிறது.

படத்தொகுப்பு குறித்தும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இடங்கள் படத்தில் இருக்கிண்றன.பொறியாளர் இந்த இடத்தில் Entrance வைத்துக்கொள்ளலாம் என்றதும் அடுத்த காட்சி வரைபடத்தில் நுழையும் கதவு நோக்கி இருக்கிறது.பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு கை மறைந்து லஞ்சம் வாங்குகிறது அடுத்த காட்சி இன்னொரு கை பூமி பூஜை செய்வதற்கு நீள்கிறது.ஒருவிஷயம் முடிந்ததும் அடுத்த விஷயத்திற்கு தாவுகிற நேர்த்தியை படத்தின் ஒவ்வொரு காட்சியும் எங்கு முடிகிறது எங்கு துவங்குகிறது என்பதைக் கவனிப்பதன் மூலம் உணரமுடியும். (தற்காலத்தில் இது அதிகம் பழகிவிட்டது என்றாலும் இந்தப் படம் எடுக்கப்பட்ட காலத்தையும் அப்போது தமிழில் இருந்த படத்தொகுப்பு உத்திகளையும் இணைத்துப் பார்த்தே இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.) இவ்வளவு நேர்த்தியாக துரிதமாக இருக்கிற படத்தொகுப்பு ஒரு இடத்தில் கவனிக்க வைத்தது. சுதா கடன் கேட்டு வந்ததும் அவள் தோழி இல்லையென்று சொல்கிறாள்.ஏமாற்றத்துடன் சுதா போனதும் தோழி கதவைச்சாத்துகிறாள்.கதவைச்சாத்தியதும் சுதாவின் கோணத்தில் காட்சி முடிந்து விடுகிறது.ஆனால் கதவைச்சாத்திய தோழி நடந்து வந்து வருத்தத்துடன் அமர்வது வரை காட்சி நீடிக்கிறது. கதையின் மையக் கதாபாத்திரங்களை மட்டுமே பின் தொடர்ந்து செல்வது ஒரு நல்ல படத்தின் குணமல்ல.கதைக்குள் வசிக்கிற மற்றவர்களுக்கும் உணர்வு இருக்கிறது.சுதாவுக்கு மட்டுமல்ல மங்காவுக்கும் கட்டிட வேலை செய்யும்போது காதலனை இழந்த கதை இருக்கிறது.

இவை தவிர கதைக்குள் நிகழ்கிற செயல்களைக் கவனிக்கும்போதும் அதிலிருக்கிற விவரணைகள் ஆச்சரியப்படுத்துகின்றன.’இன்னொரு அறை வேணுமா இப்படி வச்சுக்கலாம் ‘என்று குரல் மட்டும் ஒலிக்க காட்சியில் இருக்கும் விரல்கள் வரைபடத்தின் முனையில் இரண்டுமுறை தட்டிவிட்டு முன்னகர்கின்றன.தாத்தா வீட்டுக்குள் நுழையும் முன் எந்தக்காலை எடுத்து வைப்பது என்று தயங்கி வலது காலை வைக்கிறார். அதற்கு முன்பு அவர் கிளம்பும்போது சுவற்றில் தொங்குகிற படத்தைச் படத்தை ஏன் சரி செய்கிறார்?நண்பர் இறந்த செய்தி கேட்டு முறத்துடன் நடந்து வரும் அவர் அதைப் படுக்கையில் வைக்க முன் வந்து ஏன் பிறகு வேறொரு இடத்தில் வைக்கிறார்? பட்டுப்புடவை வாங்கி வந்ததற்காக சுதா கோபப்பட்டுக் கத்தும்போது தாத்தா வந்து பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் செல்கிறார். தாத்தா இறந்த பிறகு சுதா, தாத்தாவின் உடமைகளை எடுத்துப்பார்க்கிறார்.அப்போது அவரது பெட்டியை தனது முந்தானையால் துடைக்கிறாள்.தாத்தா முத்தம் கொடுத்ததும் பக்கத்து வீட்டுச் சிறுமி கன்னத்தை துடைத்துக் கொள்கிறாள்.அதிகாரி தான் குடிக்கிற காபிக் கோப்பையைக் கொடுக்கிறார். சுதா வேறொரு கோப்பையை எடுக்கிறாள். இந்தச் செயல்களுக்கு நாமாக அர்த்தம் கற்பித்துக்கொண்டால் கூட இயக்குனர் இதுபோல சிறிய செயல்களை காட்சிக்குள் அனுமதிப்பது ஏன்? அவை சிறிய செயல்கள்தான் என்றாலும் குணம் சார்ந்த எத்தனை அழகான தருணங்களை உருவாக்குகின்றன.அதுதான் திரை மொழியின் பரிவர்த்தனை.திரை மொழியின் அற்புதம்.

“ஒரு கதைக்களனை உருவாக்குங்கள். அந்தக் களத்தில் உயிர்ப்பான கதாபாத்திரங்களை உலவ விடுங்கள்.பிறகு அவர்கள் தங்களுக்குள் என்ன செய்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்த்து எழுதுங்கள். ஒரு ஆசிரியராக உங்களுக்கு இருக்கிற உரிமை அவ்வளவுதான்’என்று நாவல் குறித்து ஒரு மேற்கோள் இருக்கிறது.அன்பின் அற்புதமான வெளிப்பாடுகளில் ஒன்று கொடுப்பது.சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தில் அதில் இருக்கிற எல்லோரும் யாருக்காவது எதையாவது கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.உன்னதமான திரைப்படங்கள் அனைத்திலும் இந்தக் குணத்தை மனிதாபிமானத்தைப் பார்க்க முடியும். இந்தப்படம் முழுக்க பிறருக்காக யாராவது எதையாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.கோபி கதை முழுக்க சுதாவுக்காக எல்லாம் தருகிறான். தாத்தா பணம் தருகிறார். தனது சேமிப்பு அனைத்தையும் தருகிறார்.மங்கா மல்லிகைப்பூ தருகிறாள். சுதா அவளுக்குப் பழைய புடவை தருகிறாள்.தங்கைக்கு பட்டுப்பாவாடை தருகிறாள். தங்கை தாத்தாவுக்கு மருந்து தருகிறாள்.பேருந்தில் செல்லும்போது கூட ஒரு சிறுமி எழுந்து தாத்தாவுக்கு இடம் தருகிறாள்.இடம் வாங்குகிறவர் 5000 அதிகமாகக் கேட்கையில் ‘ஓகே’என்கிறார்.இது கதைக்குள் வலிந்து நடக்கவில்லை.அதன் இயல்பில் நிகழ்கிறது.ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு குணாதிசயம் இயல்பாக அமையும்போது அன்பும் விட்டுக்கொடுத்தலும் அதன் வழியே ஒரு பூரணமும் படம் முழுக்க மலர்ந்து நிற்கிறது.

கதையில் இசை துவங்கும் இடங்களைக் மட்டுமே கவனிக்கலாம். ஒரு திரைப்படத்தில் இசையின் பங்கு என்ன என்பதைக் கற்றுக்கொள்ள இந்தப் படத்தில் நல்ல உதாரணங்கள் இருக்கிண்றன.அதுபோல மின்சார ரயிலின் சத்தம் வருகிற இடங்களையும் கவனித்தால் ஒலிக்குறிப்புகள் மிகச்சரியான இடத்தில் படத்தின் உணர்வோடு சேர்வதைப் புரிந்துகொள்ள முடியும்.சுதாவும் கோபியும் அன்பை உணர்கிற தருணங்களில் வருகிற இசைதான் தாத்தா வீடு பார்க்க வருகையில் வருகிறது.இரண்டு மனிதர்களுக்கு இடையிலான அன்பை ஒரு முதியவருக்கும் வீட்டுக்குமான உணர்வாக மாற்றுவதில் இசை எத்தனை அற்புதம் செய்கிறது!

தற்போது வருகிற ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று சிலர் சொன்னால் ஏன் நன்றாக இருக்கிறது என்று கேட்கத்துவங்குவேன் அதற்கு அவர்கள் சொல்கிற அடிப்படையான பதில் படம் வேகமாக இருக்கிறது.எனவே நன்றாக இருக்கிறது.எதனால் வேகமாக இருக்கிறது?படத்தொகுப்பும் கேமராவின் நகர்வும் வேகமாக இருந்தால் படமும் வேகமாக இருக்குமா? இல்லை. கதை முன் நகரவேண்டும்.அதற்கு கதையில் நம்பகமான பிரச்சனைகள் (Conflicts) வேண்டும்.ஒரு திரைப்படத்தைப் பிரச்சனைகளே இயங்க வைக்கின்றன.முன் நகர்த்துகின்றன. படத்தின் இயக்குனர் வெற்றிகரமான வணிகப்படங்களும் எடுத்தவர் என்பதால் வீடு என்கிற இந்தப் படமும் தனக்கே உரிய வேகத்துடன் இயங்குகிறது.வாடகை வீடு காலி செய்ய வேண்டியது முதல் பிரச்சனை.சொந்த வீடு கட்டலாம் என்றதும் ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது.வீடு துவங்கியதும் மழை ஒரு பிரச்சனை.பிறகு பொறியாளர் ஒரு பிரச்சனை.பட்டுப்பாவாடையும் பட்டுச்சேலையும் பிரச்சனைகள்.மேல் தளம் போடுவதில் பணப்பிரச்சனை.தாத்தாவின் இழப்பு ஒரு பிரச்சனை.கடைசியில் வீடும் ஒரு பிரச்சனை.
இத்தனை பிரச்சனைகளை அடுத்து ஒரு நம்பிக்கை எங்கிருந்தாவது துளிர்த்துக்கொண்டே இருப்பதில்தான் படத்தின் மொத்த லயமும் இருக்கிறது.

திரும்பவும் பார்க்கையில் இந்த இருபது வருட தமிழ்ப்படங்கள் கேளிக்கையின் பெயரால் நம் மனதில் பூசிய மசகையும்,களிம்பையும் கழுவிச் சுத்தம் செய்து ஒரு புத்துணர்ச்சியையும் நம்பிகையையும் துலங்கவைக்கிற வேலையை வீடு’ செய்கிறது. இத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கையில் படத்தில் இருக்கிற பல தருணங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. Pianist படத்தில் கடைசியில் நாயகன் பியோனோவைப் பார்க்கிற இடம்,Cinema Paradiso வில் அல்பிரதோ பழைய தியேட்டருக்குள் தனியாக நிற்கிற இடம்,Children Of Heaven னில் சிறுவன் கண்னாடிக்குள் இருக்கிற காலணிகளைப் பார்க்கிற இடம் ,Road Homeல் அந்தப்பெண் பள்ளியைத் தொலைவிலிருந்து பார்க்கிற இடம், என்று இந்தக் காட்சிகள் உருவாக்கும் அற்புதமான திரைப்படத் தருணங்களுக்கு இணையான காட்சியாக வீடு படத்தில் தாத்தா தாத்தா பூசாத செங்கல் சுவரை ஒரு பேரனைப்போல தடவிப்பார்க்கிற இடத்தைச் சொல்ல முடியும்.

படத்தில் அண்மைக்காட்சிகள் சொற்பமாகவே இருக்கின்றன.’ஒரு இயக்குனர் யாரென்பதை அவரது அண்மைக் காட்சியைப் பார்த்தே சொல்லிவிட முடியும்’என்று பேலாபேலாஸின் மேற்கோள் இருக்கிறது.அதிலும் குறிப்பாக தாத்தா தனது முதுமையை உணர்ந்து உயில் எழுதுமுன்பு யோசிக்கிற அண்மைக் காட்சி முக்கியமானது.அதுபோல வீடு பார்க்க வருகையில் தாத்தா மொட்டை மாடிக்கு வந்ததும் ஒரு wide shot இருக்கிறது. இதுபோல காட்சியின் அளவை அது அண்மையா? அகன்றதா? எந்த இடத்தில் எது அது ஏன்? என்பதையும் கவனிக்கும்போது தெரிந்து கொள்வதற்கான பாடங்கள் இருக்கின்றன.ஒளியும்,அதன் உடன் சேர்ந்த நிழலும், மழையின் சாம்பல் நிறமும் ,இருளும் கதையில் இருக்கிற உணர்வை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. படத்தில் இருக்கும் வீடு சார்ந்த அரசியலும்,அங்கதமும் இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதே இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு.படம் முழுக்க பெண்மை அதன் முழு வலிமையோடு இருக்கிறது.

இன்று தமிழில் தென்படுகிற யதார்த்த சினிமா நோக்கிய நகர்தலை, இருபத்தைந்து வருடத்துக்கு முன்பாகவே பாலுமகேந்திரா ஒரு முரட்டுத் துணிச்சலுடன் செய்திருக்கிறார்.அக் காலத்தில் நிலவிய வணிகச்சூழலில் எந்த சமரசமும் இல்லாமல் தன் கலை வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பணயம் வைத்து இப்படி ஒரு முயற்சியை செய்து பார்த்திருக்கிறார் என்பது இன்றும் நம்பமுடியாத அதிசயமாகவே இருக்கிறது.ஒரு அக்ரஹாரத்தில் கழுதை,ஒரு வீடு,ஒரு சந்தியாராகம் பிறகு? இந்தக் கேள்வியைப் பின் தொடரும் வெறுமைக்கான பதிலும் பழியும் நம்மிடமே இருக்கிறது.மூன்றாந்தரமான கேளிக்கையும் மலினமும் சிறந்ததாகக் கொண்டாடப்படுவதே நம் சாபம்.ரசனை வறண்ட இந்தப் பாலையில் நீங்கள் ஒதுங்க நினைத்தால் பூசப்படாத சுவர்களுடன் இந்த ஒற்றை வீடு இருக்கிறது.

சென்ற முறை என் அன்புக்குரிய திரு பாலுமகேந்திரா அவர்களை அவரது சினிமாப் பட்டறையில் சந்தித்தேன்.வீடு படத்துக்காக கட்டிய இந்த வீடுதான் இப்போது அவரது திரைப்படக் கல்லூரியாகவும் இருக்கிறது என்பது எத்தனை தற்செயலான ஒற்றுமை. ‘சார்… இந்த வீட்டில் தாத்தா சுவரைத் தடவிப்பார்க்கிற இடம் எது ?’என்று அவரிடம் கேட்டேன். ஒரு குழந்தையைப் போல ஆர்வமுடன் படிகளில் ஏறி வந்து ‘இங்கதான் செழியன்’ என்று அந்த சுவரில் கைவைத்து தடவினார்.அந்த இசை எனக்குள் பரவ என் கண்கள் ஏனோ கலங்கி வழியத் துவங்கின.

– செழியன் – ஒளிப்பதிவாளர்.

நன்றி ‘உயிரெழுத்து’

x
^